எழுத்தின் அளவு: அ+ அ- அ
உலகப் பொருளாதாரம் கவலைப்படும் வகையில் உள்ள நிலையில், இந்தியா 7.8 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் செமிகண்டக்டர் எனப்படும் குறைக்கடத்தி உற்பத்தியை வளர்ச்சியடையச் செய்யும் வகையில், 'செமிகான் இந்தியா - 2025' மாநாட்டை பிரதமர் மோடி டெல்லி யஷோபூமியில் இன்று துவங்கி வைத்தார். மத்திய அமைச்சர் ஜிதின் பிரசாதா, டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா ஆகியோர் பங்கேற்ற நிகழ்ச்சியில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் குறைகடத்தி சிப்-பை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பிரதமர் மோடிக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவுடன் சேர்ந்து குறைக்கடத்தி எதிர்காலத்தை உருவாக்க உலகம் விரும்புவதாக கூறினார். 21ம் நூற்றாண்டின் ஒட்டுமொத்த சக்தியே ஒரு சிறிபு சிப்-புக்குள் அடங்கி இருப்பதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, உலகின் வளர்ச்சியை துரிதப்படுத்தும் சக்தியை இந்த சிப் கொண்டிருப்பதாக தெரிவித்தார். இந்தியாவில் தயாரிக்கப்படும் மிகச்சிறிய சிப் உலகின் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்றும் பிரதமர் மோடி கூறினார்.
இந்தியாவில் ஒட்டுமொத்தமாக, பத்து குறைகடத்தி திட்டங்களில் 1.5 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இது இந்தியாவின் மீதான உலகின் நம்பிக்கை வளர்ந்து வருவதை வெளிப்படுத்துவதாகவும் பிரதமர் மோடி கூறினார். முதல் காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எதிர்பார்ப்பையும் மதிப்பீட்டையும் மீறி இந்தியா சிறப்பாக செயல்பட்டதாக குறிப்பிட்ட அவர், உலகப் பொருளாதாரம் கவலைக்குரிய வகையில் சவாலான நிலையில் இருக்கும் நேரத்தில் இந்தியா 7.8 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளதாக தெரிவித்தார்.